வழக்கு குறிப்பு – ஷ்ரேயா சிங்கால் எதிர் இந்திய ஒன்றியம், 2013
பொ. ஜோதி பிரபா மூன்றாம் ஆண்டு, ஐந்தாண்டு சட்ட வகுப்பு, அரசு சட்ட கல்லூரி, திருச்சிராப்பள்ளி
முன்னுரை
ஷ்ரேயா சிங்கால் எதிர் இந்திய ஒன்றியம் வழக்கு மூலம் இந்திய நீதித்துறை, இந்திய அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள பேச்சு சுதந்திரத்தின் எல்லையை விரிவாக்கி அதன் பலன்களை இந்திய குடிமக்களுக்கு அளித்தது. இவ்வழக்கின் மூலம் தகவல் தொழில்நுட்ப சட்டம், 2000 – பிரிவு 66அ வின் அரசியலமைப்பு தன்மையானது மனுதாரரினால் பரிசோதிக்கப்பட்டது. இவ்வழக்கு, தகவல் தொழில்நுட்ப சட்ட பிரிவுகள், இந்திய அரசியலமைப்பு சட்டம், 1950 உறுபு 19(2) இல் குறிப்பிடப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை மீறி பொதுமக்களுக்கு தொந்தரவாகவும், அசோகரியம் விளைவிக்க கூடியதாகவும், ஆபத்தான, குற்றமுறு மிரட்டல் விடுக்கப்பட கூடியவகையில் பயன்படுத்தப்படுகிறது என கூறி அதன் சட்ட நிலைத்தன்மையினை இரத்து செய்து வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பாக இந்திய நீதித்துறையில் நிலைபெற்று வருகின்றது. மேலும் இவ்வழக்கின் மூலமே, அரசியலமைப்பு உறுதிப்படுத்திய பேச்சு சுதந்திரம் இணையத்தளத்தில் தனது கருத்தை வெளிப்படுத்துவதற்கும் பொருந்தும் என தீர்ப்பளிக்கப்பட்டது.